கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையை இலங்கை பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து சீனா இலங்கைக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. இலங்கை சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை குறுகிய காலத்தில் முடக்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளதாகவும், இலங்கை கடனாளர்கள் ஒன்றிணைந்து நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென, சீனா எதிர்பார்ப்பதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பரில், உள்ளூர் அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதிய குழுவும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிப்பதற்கு ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியது. அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்கள், இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன. கடன் மறுசீரமைப்பு செயல்முறையை இறுதி செய்ய அடுத்த வாரம் பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.
மேலும் ஜப்பானுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த அதேவேளை, நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாரிஸ் கிளப் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.