மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான 55 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலையீட்டுடன் இதுவரையில் 20 பில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 35 பில்லியனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரிய மின் விநியோக நெருக்கடி
இம்மாத இறுதிக்குள் இந்த பணத்தொகையை திரட்டி நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் பாரிய மின் விநியோக நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி முதல் வாரம் நிறைவடைவதற்கு முன்னர் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால் 6 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியான மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும் என்றும் மின்சாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் நிதி நிலை
செப்டெம்பர் வரை இந்நிலைமை நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி நிலைமை நிலவுவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மழையுடனான காலநிலை ஆரம்பிப்பதற்கு முன்னர் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால் புத்தளத்தில் அவற்றை தரையிறக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்து, நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை நிதி அமைச்சு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.