யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் சிறில் தான் முதல்வர் தெரிவிலிருந்து விலகுவதாகவும் முன்னாள் முதல்வர் இமானுவல் ஆனல்ட் முதல்வர் தெரிவில் களமிறங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதன்படி நாளைய தினம் தமிழரசு கட்சியின் சார்பில் யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவல் ஆனல்ட்டை மீண்டும் மாநகர முதல்வராக களமிறக்க தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.
இதேவேளை, யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவுக்குப் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் சிங்கள பெரும்பான்மை கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ யாழ். மாநகர சபையின் ஆட்சியைப் பிடிக்க விட முடியாது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு யாழ். மாநகர சபைக்குத் தெரிவான உறுப்பினர்கள் இமானுவேல் ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக பதில் முதல்வர் ஈசன் தெரிவித்துள்ளார்.
எனவே, யாழ். மாநகர சபை முதல்வராக மீண்டும் இமானுவல் ஆனல்ட் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.