70,000 குடும்பங்களுக்கு பால்மா வழங்க நடவடிக்கை!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால் மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொன்டெரா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜூடித் ஸ்வொல்ஸ், இப்பால்மாவை நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்கு இப்பால்மா, மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கூடாக பகிர்ந்தளிக்கப்படும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் தலைவரும் ஆலோசகருமான கலாநிதி சுரேன் படகொட கருத்து தெரிவிக்கையில், அனைத்து பிரஜைகளுக்கும் அவசியமான போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் நோக்கமெனத் தெரிவித்தார்.

மிகவும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு போஷணை தேவையை ஈடுசெய்வதே இதன் பிரதான குறிக்கோளென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமைக்காக பொன்டெரா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor