திருடர்களையும் கொலைகாரர்களையும் சேர்த்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? அவர்களை விரட்டிய பின்னரே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எனவே அவர்களை வெளியேற்றுவதற்கு முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என ஜேவிபியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உண்மையில் நாடாளுமன்றத்தை கலைத்து இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை.அப்படிப் பார்க்கும்போது மக்கள் விரும்புவது நாடாளுமன்றத் தேர்தலைத்தான்.அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் நாடாளுமன்றத் தேர்தலை விரும்பவில்லை. அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க் கட்சிக்கு தாங்கள் சுயேச்சை எம்.பி.க்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலை விரும்பவில்லை. அவர்கள் தோல்விக்கு பயப்படுகிறார்கள்.
ஜனாதிபதி விரும்பினால் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம். ஆனால், அரசாங்கம் இப்போதைக்கு எந்த தேர்தலுக்கும் செல்லாது” – என்றார்.