கொரொனோ தொடர்பில் அச்சுறுத்தும் தகவலை வெளியிட்டுள்ள சீனா

சீனாவில் கோவிட் வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. இதனால், தினமும் கோவிட்டினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சங்களில் பதிவாவதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டு அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன

இந்நிலையில் மீண்டும் சீனாவில் கோவிட் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கோவிட்டினால் ஏற்படும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியுள்ளது. சீனாவில் தினசரி கோவிட் பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது.

கோவிட் பாதிப்பு தகவல்களை சீன நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கோவிட் வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ள நிலையில் சீன அரசின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கோவிட் வைரஸ் பாதிப்பு
இந்நிலையில், உலக அளவில் கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.15 கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போது கோவிட் வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவிட்டை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 661,500,930-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20,694,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும்
கோவிட் பாதிப்பில் இருந்து இதுவரை 634,121,194 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கோவிட் வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6,685,285 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன் (IHME) எனும் நிறுவனத்தின் புதிய கணிப்பின்படி, கோவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்படுவதால் 2023ஆம் ஆண்டு அதிக பரவல் ஏற்பட்டு உலகளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor