15வது ஜனாதிபதியாக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

ஒடிசாவில் உள்ள மலைகிராமத்தில் பிறந்த பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு(64), நாட்டின் 15வது ஜனாதிபதியாக இன்று(ஜூலை 25) பதவியேற்க உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து சமீபத்தில் நடந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார்.

மொத்தம் 6.76 லட்சம் ஓட்டுகளுடன், அதாவது 64 சதவீத ஓட்டுகள் பெற்று அவர் வென்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 15வது ஜனாதி பதியாக அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

பார்லிமென்ட் மைய மண்டபத்தில் காலை 10:15 மணிக்கு நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.அதன் பின் பார்லிமென்டில் அவர் உரையாற்றுவார்.

இதற்கு முன்பாக, ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் முர்முவை, பதவியில் இருந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்த் வரவேற்பார். அங்கு முறைப்படி வரவேற்பு வழங்கப்படும்.

பார்லிமென்டில் நடக்கும் நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு துாதர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர். பார்லிமென்டில் நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஜனாதிபதி மாளிகை செல்லும் முர்முவுக்கு முப்படைகளின் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்தபின் பிறந்த ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல் முறை. மேலும் மிகவும் இளம் வயதில் பதவியேற்கும் பெருமையையும் பெறுகிறார். இரண்டாவது பெண் ஜனாதிபதியாக அவர் விளங்குவார்.

சந்தாலி புடவை

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக திரவுபதி முர்முவின் சந்தாலி பழங்குடியின மக்கள் அணியும் பாரம்பரிய, சந்தாலி புடவை அணிந்து, அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரவுபதி முர்முவின் சகோதரர் மற்றும் அவரது மனைவி, சந்தாலி புடவையுடன் வருகின்றனர்.

ஒடிசா பழங்குடியின மக்கள் தயாரித்த இனிப்பு வகைகளையும் அவர்கள் எடுத்து வருகின்றனர். பதவியேற்பு விழாவில், திரவுபதி முர்முவின் சகோதரர் தரினிசென் தூடு, அவரது மனைவி சுக்ரி தூடு, முர்முவின் மகள் இதிஸ்ரீ, அவரது கணவர் கணேஷ் ஹெம்பிராம் ஆகிய நான்கு உறவினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor