திருகோணமலையில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்க கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

திருகோணமலையில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் தலா ஒரு நகர சபையும், ஒரு பிரதேச சபையும் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புள்ளி விபரங்களை பார்க்கும் பொழுது திருகோணமலை மாவட்டத்தில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பிரதேச செயலக பிரிவுகள்
அவை உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் தோப்பூர் உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன், கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் கிண்ணியா பிரதேச சபையினை உள்ளடக்கிய பகுதியினை தனியான பிரதேச செயலக பிரிவாகவும், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேச செயலக பிரிவும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளும், தோப்பூர் உப பிரதேச செயலக பிரிவும் காணப்படுகின்றது.

கடந்த 1975ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட கொட்டியரப்பற்று பிரதேச செயலகம் காணப்பட்டது.

அதிலிருந்து தெஹிவத்தை மற்றும் சேருவில கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி சிங்கள மக்களுக்காக சேருவில பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு, ஏனைய 9 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி மூதூர் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது.

கடந்த 1998ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக பிரிவிலிருந்து ஈச்சிலம்பற்று கிராம சேவகர் பிரிவினை மாத்திரம் பிரித்து தமிழ் மக்களுக்காக வெருகல் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது.

42 கிராம சேவகர் பிரிவுகள்
இந்நிலையில் கடந்த1975ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 கிராம சேவகர் பிரிவாக இருந்த பகுதியிலிருந்து வெறும் 03 கிராம சேவகர் பிரிவுகளை பிரித்து இரண்டு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனைய 08 கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு பிரதேச செயலகம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது மூதூர் பிரதேச செயலக பிரிவில் 42 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன.

தோப்பூருக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்ற கோரிக்கை எனது தந்தை காலம்சென்ற M.E.H. மகரூப், இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு முதல் 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி தோப்பூர் உப பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது. நாட்டில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்காக இதுவரை ஐந்து எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன அவை அனைத்திலும் தோப்பூர் தனி பிரதேச செயலகத்திற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தோப்பூர் உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட பின்னர் நாட்டில் இரண்டு முறை புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தோப்பூர் உள்ளடக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor