சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி சேர்ந்த வடிவேல் லிங்கேஷ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
திருமணம் செய்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏஜென்சி மூலம் தனது மனைவி மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது மனைவி , தற்போது அங்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஒழுங்கான உணவு வழங்கப்படாமை போன்ற பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தமது குடும்பத்தை காப்பாற்ற ஓமானுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக அழைத்துசெல்லப்பட்ட இலங்கைப்பெண்கள் அங்கு பாலியல் தொழிலுக்காக விற்கப்படுவதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.