அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர்.
குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனும் புதிய அறிவிப்பை அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஜூலை 19, 2013 முன்னதாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து நிரந்தர விசாக்களில் உள்ள அகதிகளின் குடும்ப மீள் ஒன்றிணைவு விசாக்களுக்கு குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்படும் என்ற முந்தைய அமைச்சரின் உத்தரவில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் மாற்றம் கொண்டு வர இருக்கிறது.
படகு வழியாக வந்து அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவர்களுக்கும் தற்போது அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் அல்லது பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாக்களில் உள்ளவர்களுக்கும் இந்த கொள்கை மாற்றம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், தற்போது தற்காலிக விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசாக்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை தொழிற்கட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
ஜூலை 19, 2013 எனும் காலக்கெடு ஏன்..?
அதேசமயம், ஜூலை 19,2013 பின்பு படகில் வந்த அகதிகள் தொடர்பில் எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. இதனால் இந்த அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையிலேயே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிலை தொடர்கிறது.
அவுஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமரான கெவின் ரூட் ஜூலை 19,2013க்கு பிறகு படகில் வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அறிவித்தார். அதன் முதல், இந்த காலக்கெடுவுக்கு பின்பு படகில் வந்த அகதிகள் பிரித்து அணுகப்பட்டார்கள்.
இந்த அகதிகள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக இன்றும் கடல்கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஆண்ட்ரூ கில்சை சந்தித்த அகதி
இந்த சூழலில், அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்சை சந்தித்த அகதியான மொஸ்தபா அசிம்தபர், லேபர் அரசாங்கம் தனது கொள்கையை மாற்றாது என அமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் மொஸ்தபா போன்று ஜூலை 19, 2013 பிறகு வந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கும் அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கப்படாது எனத் தெரிய வந்துள்ளது.
“கடந்த தசாப்த கால அரசியல் இப்போது பொருத்தமானதாக இல்லை. ஆனாலும் அதற்கான விலையை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், இந்த தொழிற்கட்சி அரசாங்கம் எங்கள் உரிமைகளை காக்காது,” என அந்த அகதி குறிப்பிட்டிருக்கிறார்.