பிராம்ப்டன் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இந்திய வம்சாவளி மாணவனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிராம்ப்டனில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பீல் பிராந்திய பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சிக்கிய18 வயது மாணவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண முடியாமல் பொலிசார் திணறி வந்தனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை தொடர்புடைய சந்தேக நபரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் 17 வயதான ஜஸ்தீப் தேசி எனவும், இவர் பிராம்ப்டன் பகுதியில் குடியிருக்கும் இந்தியவம்சாவளி குடும்பத்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிய அனுமதி பெற்றபின்னரே, மாணவர் ஜஸ்தீப் புகைப்படத்தையும் அடையாளத்தையும் வெளியிடுவதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் ஆயுதத்துடன் காணப்படலாம் எனவும், ஆபத்தானவர் என்பதால் பொதுமக்கள் நெருங்க முயற்சிக்க வேண்டாம் எனவும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, விசாரணை அதிகாரி மந்தீப் கத்ரா தெரிவிக்கையில், பொலிசார் தீவிரமாக விசாரித்து, சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும், இந்த விவகாரத்தால் பொது பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக அவர்கள் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.