பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

இதேபோன்று எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சீனி, பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை எதிர்வரும் சில மாதங்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இன்றி சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்று இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலையினை குறைக்கும் நோக்கில் கோதுமை மாவின் விலையினைக் கட்டுப்படுத்த எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை பகிரங்க கடன் முறைமையின் பிரகாரம் கோதுமை மா இறக்குமதி செய்யப்படும்.

இதேவேளை, இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கும் உழுந்து, குரக்கன், மஞ்சள் போன்ற உணவுப் பொருட்களை முறையற்ற வகையில் சிலர் இறக்குமதி செய்யும் விடயத்தை வர்த்தகர்கள் இதன்போது அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

Recommended For You

About the Author: webeditor