யாழில் இ.போ.ச ஊழியர்கள் முரண்பாடு

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய அலுவலகர் பருத்தித்துறை சாலை முகாமையாளராக நியமிக்கப்பட்டார். எனினும் அவருக்கு பருத்தித்துறை சாலையின் பெரும்பாலான ஊழியர்களின் எதிர்ப்பு நீடித்தது. அதனால் அவர் வடபிராந்திய போக்குவரத்து சபையின் அலுவலகமான கோண்டாவிலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இரு தரப்பினருக்குகிடையே மோதல்
இந்நிலையில் முகாமையாளர் நேற்று புதன்கிழமை கொழும்பு அலுவலகத்துக்கு அறிவித்துவிட்டு, மூத்த வடபிராந்திய முகாமையாளருக்கு அறிவிக்காமல், பருத்தித்துறை சாலைக்கு சென்றுள்ளார்.

அதன்போது அங்கு எதிர்ப்பு நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புநிலை சிறிது நேரத்தில், கைகலப்பாக மாறியதை தொடர்ந்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார், முகாமையாளர் மற்றும் அவருக்கு ஆதாரவான நால்வர் மற்றும் எதிர்ப்பாளர்கள் 7 பேர் என 11 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேரும் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிவான், சந்தேக நபர்கள் 11 பேரையும் கடுமையாக எச்சரித்ததுடன், 11 பேரையும் தலா 10 ஆயிரம் ரூபாய் காசுப் பிணை மற்றும் இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க நீதவான் கட்டளையிட்டார்.

Recommended For You

About the Author: webeditor