மின் பாவனையாளர்களுக்கு அறிமுகமாகும் புதிய வரி

இலங்கையில் மின்சார பாவனையாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அண்மையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி மின் பாவனையாளர்களிடம் அறவிடப்படுவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்திற்கு சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியினை அறவிடாமல் விலக்களிக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த வரிக்கு அனைத்து நிறுவனங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதால் விலக்களிப்பு செய்ய முடியாது என நிதி அமைச்சு பதிலளித்துள்ளது.

எனவே அக்டோபர் முதலாம் முதல் அனைத்து மின் பாவனையாளர்களிடமும் குறித்த வரியானது அறவிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார கட்டண உயர்வு தொடர்பான குற்றச்சாட்டு
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் யோசனையின் பிரகாரம் 30 வீதத்தினால் மேலும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

அதன்படி மின்சாரக் கட்டணங்களில் சமூகப் பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய ஏற்கனவே 75 முதல் 200 வீதம் வரையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி முதல் சமூகப் பாதுகாப்பு வரி என்ற பெயரில் மேலும் 2.56 வீதம் அறவீடு செய்யப்படுகிறது. எனினும், இந்த வரி பற்றிய விபரங்கள் தனியாக கட்டணப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இவ்வாறான ஓர் பின்னணியில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 25 வீதமாக உயர்த்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
இந்த நிலையில் இன்றைய தினம் (27) மற்றும் நாளைய தினம் (28) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் இரு தினங்கள் 2 மணித்தியாலமாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த நாட்களை விட எதிர்வரும் நாட்களில் 20 நிமிடங்கள் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor