பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பாடசாலை மாணவர் ஒருவரை மோதிக் காயப்படுத்தி அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை செவ்வாய்க்கிழமை கினிகத்தேன பொலிஸ் கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கினிகத்தேனை ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர், கல்வி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இதன்போது, ஹட்டனில் இருந்து யட்டியாந்தோட்டை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி இவரை மோதியது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக முச்சக்கர வண்டி சாரதி அவரை அழைத்துச் சென்ற போதிலும், காயத்திற்கு மருந்து கட்டுமாறு கூறி, ரூ.500 கொடுத்து, இரக்கமில்லாது அவரை நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
காயமடைந்த குழந்தையைப் பார்த்த பிரதேசவாசிகள், கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிசார், விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்தனர்.