கச்சாய் பாலாவி ஜே 325 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பெறும் குடும்பங்களின் சமுர்த்திக் கொடுப்பனவு மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில் சமுர்த்தி வங்கியில் கடன் பெற்ற சமுர்த்திப் பயனாளிகள் கடன் தொகையை மாதாந்தம் செலுத்தாததால் அவர்களின் கடன் நிலுவையை செலுத்தி முடிக்கும் வரை சமுர்த்திக் கொடுப்பனவு வழங்க முடியாது என்று கூறி மூன்று மாதங்கள் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவினை கொடிகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்
கடன் பெற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு பிணை நின்றவர்களின் கொடுப்பனவை நிறுத்தலாம் கடன் பெறாதவர்களின் கொடுப்பனவை ஏன் மூன்று மாதங்களாக நிறுத்த வேண்டும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் கஸ்ரமான நிலையில் சமுர்த்தி பெறும் குடும்பங்களாகிய நாம் அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றோம். உடனடியாக எமக்குரிய கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் சமுர்த்தி வங்கி முகாமையாளரிடம் தொடர்பு கொண்ட போது கடன் பெற்ற சமுர்த்திப் பயனாளிகளில் 80 வீதமானவர்கள் ஒழுங்கான முறையில் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதன் காரணமாக கடன் பெற்ற சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் பிணை நின்றவர்களின் கொடுப்பனவுகள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டது. மற்றவர்களின் கொடுப்பனவுகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது கடன் தொகையை மீளச் செலுத்தியவர்களுக்குரிய கொடுப்பனவும் வழங்கப்படுகிறது எனக் கூறினார்.