நான்கு வருடங்களாக கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுவன்!

களனி – திப்பிட்டிகம பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுவனொருவர் கடந்த 4 வருடங்களாக கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு – களனியில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனின் தாயார் மறுமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டாவது கணவருக்கு சிறுவனை பிடிக்காத காரணத்தால் சிறுவனை பராமரிக்குமாறு பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுவன் களனி , திப்பிட்டிகம பிரதேசத்தில் வளர்ந்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்களான பெண், கணவன் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் சிறுவனை கடந்த நான்கு வருடங்களாக கொடூரமாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கல்விக்கு இடையூறு
மேலும், சிறுவனை குறித்த வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் செய்யுமாறு அவரது கல்விக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பில் மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்,சிறுவன் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சிறுவனின் தாயாரை பாடசாலைக்கு வரவழைத்து ஆசிரியர்கள் தெரிவித்த போதும் அவர் அதனை கவனத்தில் கொள்ளாத நிலையில், வளர்ப்பு பெண் ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் வழங்கிய வாக்குமூலம்
இதனையடுத்து ஆசிரியர்கள் பேலியகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சிறுவன் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய,அயல் வீட்டு பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது, ​​பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பேலியகொட மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் தமரா துஷாந்தி டி சில்வா, மருத்துவ அறிக்கை கிடைத்ததன் பின்னர் குடியிருப்பாளர்கள் மற்றும் அவரது தாயாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor