யாழில் மாணவியின் தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற இராணுவ உத்தியோகத்தர்

யாழ்ப்பாணம் பலாலி – வள்ளுவர்புரத்தில் வீதியில் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

வழிப்பறிக் கொள்ளை

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

15 வயது மாணவி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தவர் மாணவியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துவிட்டு அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார்.

மாணவி காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து வழிப்பறிக் கொள்ளையனை மடக்கிப்பிடித்துள்ளனர்.

இராணுவத்தின் தலையீடு

இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாணவியிடமிருந்த அபகரித்த சங்கிலியையும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைப் பொலிஸார், பலாலி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எனினும், மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூறு கைவிடப்பட்டு்ள்ளது. சந்தேகநபர் பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

Recommended For You

About the Author: webeditor