சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

அடுத்த வருட முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

முதலாவது கடன் தவணை

மேலும் கூறுகையில்,“தமது குழு வொஷிங்டனுக்கு சென்றபோது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து சகல கடன் வழங்குநர்களையும் அழைத்து கலந்துரையாடியது.

குறித்த கலந்துரையாடலுக்கு அமைய நல்லது நடக்கும் என எதிர்பார்கிறோம். கடந்த வாரம் சீனாவின் நிதியமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

அடுத்த வருட முதற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து எமக்கு முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம்.”என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம்

இதேவேளை சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி மற்றும் இலங்கையின் கடன் வழங்குநர்கள் இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கு இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 10 முதல் 16 வரை வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக் குழுவின் வருடாந்தக் கூட்டங்கள் மற்றும் விசேட குழுக் கூட்டங்கள் என்பன தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருதரப்பு கலந்துரையாடல்கள்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் உலக வங்கியின் நிர்வாகப் பணிப்பாளர், தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய உப தலைவர் மற்றும் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கக் குழு உள்ளிட்ட உலக வங்கி அதிகாரிகளும் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை ஏற்படுத்திய நெருக்கடிகளின் தாக்கம் இந்த வருட வருடாந்த கூட்டங்களில் வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்று என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor