யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இப்படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.
1987 ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்தியப் படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.
இப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும், கவச வாகனம் (செயின்பிளக்) கொண்டு வீதியில் போட்டு நசித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.
அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழினப் படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.
இந்நிலையில் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறிய நினைவுத் தூபியும் அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த நினைவுத்தூபியிலேயே இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.