புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்..!
2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பப் படிவமானது, 2026.01.21 ஆம் திகதியிடப்பட்ட 2472/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் செயலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கட்சி அங்கீகரிக்கப்படுமிடத்து, 2026.01.13 ஆம் திகதியிடப்பட்ட 2471/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட (ஆ) அட்டவணையில் உள்ள கட்சிச் சின்னங்களில், அந்தக் கட்சிக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ள எதிர்பார்க்கும் சின்னத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இதற்கு மேலதிகமாக கட்சியின் யாப்பு, உத்தியோகத்தர் குழாம் பட்டியல், கடந்த நான்கு வருடங்களுக்கான பெண் உத்தியோகத்தர்களின் பெயர்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு முன்னரான நான்கு வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கைகள், கட்சியின் தற்போதைய கொள்கைப் பிரகடனம் மற்றும் அரசியல் கட்சியொன்றாகக் குறைந்தது கடந்த நான்கு வருடங்களாவது தொடர்ச்சியாகச் செயற்பட்டதை உறுதிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கக்கூடிய அனைத்து ஆவணங்களையும் தனித்தனி கோப்புகளாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அவற்றை, உரிய கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணைக்குழுவிற்குப் பதிவுத் தபாலில் அனுப்புவதன் மூலமோ அல்லது நேரடியாக வருகை தந்து கையளிப்பதன் மூலமோ சமர்ப்பிக்க முடியும்.
குறித்த விண்ணப்பங்களை அனுப்பும்போது, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2026′ எனக் குறிப்பிடப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை தலைவர், தேர்தல் ஆணைக்குழு, சரண மாவத்தை, இராஜகிரிய என்ற முகவரிக்கு அனுப்புமாறும் அல்லது அலுவலகத்திற்கு வருகை தந்து கையளிக்குமாறும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

