யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்..!

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று (24.01.2026) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது.

 

சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது.

 

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.

 

இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

சர்வதேச சட்ட மாநாட்டில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: admin