T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது..!
கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய ஒருவரும் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை, ஒலியமுல்ல பகுதியில் வைத்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், இந்த குற்றத்திற்கு உதவிய மற்றைய சந்தேகநபர் மீகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 54 வயதுடைய மீகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

