பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட, மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியத்தால் நேற்று (08.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம்
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அனைத்துவித வன்முறை சட்டங்களையும் உடனடியாக நீக்கக் கோரியும், அரகலவில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக கல்முனை வீதியூடாக கல்லடிப்பாலம் விளையாட்டு மைதானத்தினை அடைந்து அங்கு பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு கருத்துரைத்துள்ளார்.
இதற்கமைய, ”புனர்வாழ்வு சட்டம் ஊடாக இந்த நாட்டை சீரழித்த மகிந்த ராஜபக்ச குடும்பம் உட்பட இந்த அரசாங்கத்துடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள்.
40 வருடங்களாக முடக்கப்பட்ட தமிழர்கள்
இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்பது கடந்த 40 வருடங்களாக தமிழ் பேசும் மக்களை அடக்கியாண்ட சட்டமாகும்.
கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம் இந்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களும் உள்ளடங்குகின்றார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு இந்த சட்டத்தின் மூலம் சிங்கள மக்களையும் கைதுசெய்து அடக்குமுறைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 25 நாட்களுக்கு மேலாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி காங்கேசன்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டத்தினை செய்திருந்தோம்.
கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்
அந்த போராட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தினரையும் சேர்த்தே முன்னெடுத்துள்ளோம். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் அதன் ஏற்பாட்டாளரான தேரர் மற்றும் பலர் 50 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் இதே சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலைசெய்யப்பட வேண்டும்.
கடந்த 50நாட்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை விடுதலைசெய்யுமாறு போராட்டம் நடத்தும் இதேமேடையில் எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.