சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி..!
2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை குறித்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தாவின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி அமர்வில், தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பான சட்டரீதியான கடப்பாடுகள் மற்றும் தகவல்களை மறைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய சட்ட விளைவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சங்கடமிக்க நிதிக்குற்றங்களை ஒடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு அடிப்படை அங்கமாக இந்த பட்டறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான உரையை மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும், ஸ்ரீலங்கா விமானப்படையின் சட்டப் பணிப்பாளர் ஜெனரலுமான எயார் கொமடோர் சுதர்சன டி சில்வா (ஜனாதிபதி சட்டத்தரணி) நிகழ்த்தினார்.
2025 ஜூன் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டக் கட்டமைப்பு குறித்து ஆழமான பகுப்பாய்வை முன்வைத்த அவர், குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்டவை என சந்தேகிக்கப்படும் தகவல்களை அறிந்த எந்தவொரு நபரும் அல்லது அதிகாரியும் அத்தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பது சட்டப்படி கட்டாயமானது என வலியுறுத்தினார்.
மேலும், தகவல்களைத் தன்னிச்சையாகப் புறக்கணிப்பது அல்லது வெளிப்படுத்தத் தவறுவது இந்தச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுவதுடன், அதற்காகக் கடுமையான சட்டத் தண்டனைகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டக் கட்டமைப்பு குறித்து முப்படை மற்றும் சிவில் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்குத் தெளிவான புரிதலை வழங்குவதன் மூலம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், சட்டவிரோத நிதி வலைப்பின்னல்களைக் கண்டறிந்து அவற்றை முடக்கவும் பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்), முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் பலரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வுத் திட்டம், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நிறைவடைந்தது.

