2026 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்காக கொழும்பு SSC மைதானத்தின் அனைத்து நவீனமயமாக்கல் பணிகளும் ஜனவரி 20 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த தெரிவித்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு SSC மைதானத்தில் நிறுவப்படும் புதிய அதிநவீன LED மின்விளக்கு அமைப்பைப் பொருத்தும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக வீரர்கள் ஓய்வறையை மேம்படுத்தல், போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்களுக்காக புதிய அறைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல பணிகள் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த ஒட்டுமொத்தத் திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 1.7 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த,
”முழுமையான திட்டத்திற்கும் 1.7 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவாகிறது..
ICC போட்டிகளுக்காக கொடுப்பனவுகளை வழங்குகிறது..
அவற்றையும் சேர்த்துக்கொண்டு இலங்கை கிரிக்கெட்டின் ஏனைய வருமானங்களையும் சேர்த்தே இந்த அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறோம்..
ஜனவரி 20 ஆம் திகதிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுப்போம்” என்றார்

