நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்கின்றது..!
நாட்டில் சிங்கள பௌத்தம் மேலோங்கி நிற்பதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:
அண்மையில் தையிட்டி பகுதியில் உள்ள சட்டவிரோதக் கட்டடமான திஸ்ஸ விகாரையை அகற்ற வேண்டும் என்ற பதாகையை வலி வடக்கு பிரதேசசபையினர் ஒட்டச் சென்ற வேளையில் பொலிஸார் சபையினுடைய அரச பணியினைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதனூடாக நாட்டில் சிங்களப் பௌத்தம் மேலோங்கி நிற்பதனை உறுதியாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அத்துடன் வணக்கத்திற்குரிய இந்து சமயத் தலைவர், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், நிலத்தின் உரிமையாளர்கள் ஆகியோர் அடாத்தாகக் கைது செய்யப்பட்ட விடயத்தினையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பௌத்த தேரர்கள் அடாவடி செய்யும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸார், இந்து சமய மதகுரு மக்களுக்காகப் போராடும் போது அவமதித்து அவரைக் கைது செய்கின்றார்கள். அத்துடன் பிரதேச சபை தனது நடவடிக்கையை முன்னெடுக்கச் சென்ற வேளையில் அதற்கும் பொலிஸார் தடை விதிக்கின்றனர். இந்தச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

