யாழ் மாவட்டம் வரவுசெலவுதுதிட்ட நிதிமுன்னேற்றத்தில் முதலிடம்..!

யாழ் மாவட்டம் வரவுசெலவுதுதிட்ட நிதிமுன்னேற்றத்தில் முதலிடம்..!

யாழ்ப்பாணம் மாவட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் 100% முன்னேற்றத்தை காண்பித்து தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளரின் 08.12.2025 ஆம் திகதிய அறிக்கையிடலின் பிரகாரம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தின் அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டம் 100% முன்னேற்றத்தை காண்பித்து முதலாவது இடத்தை பெற்றுள்ளது என இன்றைய தினம் (24.12.2025) நடைபெற்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியமைக்கு எம்முடன் பூரணமாக ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும், பிரதேச மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பிரதேச செயலாளர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, பிரதேச செயலாளர்களுக்கு உறுதுணையாக செயற்பட்ட பிரதி ,உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் விடய உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தும் யாழ் மாவட்டம் முன்னிலையில் திகழ்வதற்கு பூரண ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் வழங்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்களுக்கும் தமது நன்றியினைத் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் நேர்த்தியான முறையில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவிப்பதாகவும், அரசாங்க அதிபர் அவர்கள் 03 தேர்தல்களை வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் எனவும், அவரின் சிறப்பான நிர்வாக செயற்பாடுகளை அவதானித்து வருவதாகவும், 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி முன்னேற்றம் மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தில் எமது மாவட்டம் முன்னிலை பெற்றதையிட்டு – ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் மகிழ்ச்சி யடைவதாகவும் தெரிவித்தார். மேலும் எமது அரசாங்கம் அரசாங்க உத்தியோகத்தர்கள் மீதான எதுவித பழிவாங்கல்களும் மேற்கொள்வதில்லை என்ற கொள்கைக்கு அமைவாக செயற்பட்டுவருவதாகவும், அண்மையில் “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து எமது நாடு பழைய நிலையினைக்காட்டிலும், மேலும் முன்னேற்ற அடைய வேண்டும் என்பதே ஜனாதிபதி அவர்களின் இலக்கு என்றும், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வரும் ஜனாதிபதி அவர்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு நல்கி எமது நாட்டை முன்னேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் முதலாம் இடம் பெற்றமைக்காக அரசாங்க அதிபர் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கப்பட்டது.

மேலும் இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாவட்ட அபிவிருத்தித்திட்டம், கிராமிய அபிவிருத்தி, வாழ்வாதார கிராமிய அபிவிருத்தித்திட்டம், வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தித்திட்டம் ஆகிய திட்டங்களின் முடிவுறுத்திய,முடிவுறத்தாத திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin