வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், நேற்று (17.12.2025) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், வழக்கை 2026 ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கடந்த 2023.10.23 அன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமணரத்ன தேரர், “வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக்கொல்ல வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இக் கருத்துக்கு எதிராக 2023.10.27 அன்று கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் தேரரைக் கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால், கடந்த 2025.12.15 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று மூன்று சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வுப் பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தேரர் சரணடைந்தார். பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 50 பேர் வரை திரண்டு தேரருடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

