3,200 ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் வேலை செய்யாத காரணத்தினால் பொலிஸாரால் சாரதி அனுமதிப்பத்திரம் பொறுப்பேற்கப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதனைத் திரும்ப ஒப்படைக்க பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் 3,200 ரூபாய் இலஞ்சம் கோருவதாகவும் எத்தால பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் முதலில் 2,200 ரூபாயைக் கோரியிருந்த நிலையில், பின்னர் நேற்று (17) மேலதிகமாக 1,000 ரூபாயைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் (போக்குவரத்துப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி) பணியாற்றும் குறித்த பொலிஸ் சார்ஜன்ட், நேற்று மாலை 4.10 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin