அனர்த்த மீட்புக்கு மேலதிகமாக 500 பில்லியன் தேவை..!

அனர்த்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்காக மேலும் 500 பில்லியன் ரூபா மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான போதிய பண இருப்புகள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

“வரும் ஆண்டிற்கான மூலதனச் செலவாக 1,400 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம். வீதிகள் மற்றும் வைத்தியசாலைகள் அமைப்பது போன்றவற்றுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்திற்கு நிதியை மீள ஒதுக்குவதற்குப் பணம் உள்ளது. எனவே புதிதாகப் பணம் தேவைப்படும் என்று நான் நம்பவில்லை.

ஆனால், வீடுகளைச் சுத்தம் செய்வது போன்ற அன்றாடச் செலவுகள் உள்ளன. அதற்குச் சுமார் 500 பில்லியன் ரூபா அதிகமாகச் செலவாகும். அதைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பச் செலவாக 13% மட்டுமே செலவிட முடியும் என்ற IMF நிபந்தனை உள்ளது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை காரணமாக, அதற்கும் அதிகமாகச் செலவிட எமக்கு ஒருவித சுதந்திரம் உள்ளது. மற்றொன்று, அரசாங்கத்தின் வங்கிக் கணக்கில் ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகப் பணம் உள்ளது.”

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஒரு சட்டரீதியான நிதியமாக பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

“அந்த நிதியம் ஒரு சட்டரீதியான நிதியமாக இருக்க வேண்டும். மாறாக ‘ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்டை’ போன்ற நிதியங்களை உருவாக்க முடியாது. அவ்வாறு ஒன்றை உருவாக்க பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து அதனை நிறைவேற்ற வேண்டும். இன்னும் அவ்வாறு செய்யப்படவில்லை. பாராளுமன்றத்தின் ஊடாக இந்த நிதியம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் இது சரியான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை என்பதே எனது கருத்து. அரசும் தனியார்த் துறையும் இணைந்து இதனைச் செய்ய முடியும். தனியார்த் துறைக்குச் செய்ய இடமளிக்க வேண்டும். அவர்களால் முடியாதவற்றை அரசாங்கம் செய்ய வேண்டும்.”என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin