சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு..!

சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு..!

சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்த நிலையை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மக்களின் நம்பிக்கை மற்றும் அவசர நிலையை தவறாகப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் போன்று போலியாகத் தோற்றமளிக்கும் மோசடியாளர்கள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு கணிசமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாத மக்களை ஏமாற்றும் வகையில், மோசடியாளர்கள் போலியான ஊக்குவிப்பு சலுகைகள், பணப் பரிசுகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்குவதாக சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட புயல் மற்றும் கன மழையைத் தொடர்ந்து, நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை இணையவழி குற்றவாளிகள் மோசடியான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் மோசடியான இணைய இணைப்புகளை (Links) வெளியிட்டு, அந்த இணைப்புகள் மூலம் பணத்தை நன்கொடையாக வழங்க பொதுமக்களைத் தூண்டுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிலரின் வங்கிக் கணக்குகளுக்குள் அத்துமீறி நுழைந்து மோசடியாளர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தமது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை உடனடியாக இழந்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சந்தேக்கத்திற்கிடமான இணைய இணைப்புகளுக்குள் நுழைய வேண்டாம் எனவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் போது பாதுகாப்பாக இருக்குமாறும், தெரியாத நபர்கள் அல்லது உறுதிப்படுத்தப்படாத இணையத்தளங்களுக்குள் நுழையும் போது அதிக கவனத்துடன் இருக்குமாறும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP)ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம் எனவும் இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள், முன் கோரிக்கை எதுவும் இன்றி சமூக ஊடகப் பதிவுகள் அல்லது இணைய இணைப்புகள் மூலம் பொதுமக்களின் முக்கிய தகவல்களைக் கோருவதில்லை என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்தக் காலப்பகுதியில் தமக்கு கிடைக்கும் எந்தவொரு சமூக ஊடகச் செய்தியிலும், நிதி சேகரிப்பு கோரிக்கை அல்லது பணச் சலுகை குறிப்பிடப்பட்டிருந்தால் அது குறித்து அதிக கவனம் செலுத்துமாறும், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin