பொலிஸ் ஆணையையும் மீறி மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல்..!

பொலிஸ் ஆணையையும் மீறி மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல்..!

சாவகச்சேரிப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றில் பயணித்தோர் பொலிஸ் ஆணையையும் மீறி தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த லொறியை சாவகச்சேரி, சங்குப்பிட்டி வீதித் தடையில் வைத்து நிறுத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், லொறி உத்தரவை மீறி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் லொறியைப் பின் தொடர்ந்துள்ளனர்.

அதேநேரம் வீதியில் பயணித்த கெப் வண்டியொன்றில் இருந்த குழுவொன்றும் பொலிஸாருக்கு உதவ முன்வந்தது..

பின்னர் வேன் ஒன்று அங்கு பிரவேசித்த நிலையில், பொலிஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வண்டிக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் லொறியில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் லொறியைத் துரத்திச் சென்றும் பொலிஸாரால் அதில் பயணித்தோரை கைது செய்ய முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த லொறியில் தேக்கு மரக்குற்றிகள் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்துடன், பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய வேனில் இருந்தவர்கள், லொறியில் பயணித்தோரின் அறிவித்தலின் பேரில் அங்கு பிரவேசித்தவர்கள் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறான சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குழுவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin