மட்டக்களப்பில் தொல்லியல் வழிகாட்டிப் பலகைகள் அகற்றம்: உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களுக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் சில அகற்றப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், மரபுரிமை இடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்கும் பொதுவான அரச செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, தொல்பொருள் திணைக்களம் பல வருடங்களாக இத்தகைய பெயர்ப்பலகைகளை நிறுவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், திட்டமிட்ட குழுவொன்று இப்பகுதியிலுள்ள நான்கு தொல்லியல் இடங்களிலிருந்து இந்தப் பலகைகளை அகற்றியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவத்திற்குப் காரணமானவர்கள் தாமதமின்றி அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், இச்செயலின் பின்னணியில் அரசியல் நோக்கம் கொண்ட குழுவொன்று செயல்படுவது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

