உங்கள் வீட்டுக் கழிப்பறையும் வரியை உயர்த்தப் போகிறது! 2026-ல் பிரான்சில் வரவுள்ள புதிய மாற்றம்

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்குத் திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு முதல் உங்கள் சொத்து வரி (Taxe foncière) கணிசமாக உயரவுள்ளது.

இதற்குக் காரணமாக அரசாங்கம் கையில் எடுத்திருப்பது உங்கள் வீட்டில் இருக்கும் “ஆறு வசதிக்கூறுகள்” (Six éléments de confort) ஆகும்.

அரசாங்கம் எப்படிக் குளியலறையையும், கழிப்பறையையும் கணக்கில் கொண்டு வரியை உயர்த்துகிறது என்பதன் சுவாரசியமான விவரங்கள் இதோ:

🚿 அந்த ஆறு வசதிகள் என்னென்ன?

உங்கள் இல்லத்தில் பின்வரும் வசதிகள் இருந்தால், இனி அவை வீட்டின் பரப்பளவோடு கூடுதல் சதுர மீட்டர்களாகக் கணக்கிடப்பட்டு வரியுடன் சேர்க்கப்படும்:
தண்ணீர் வசதி (Eau)
மின்சாரம் (Électricité)
குளியல் தொட்டி (Baignoire)
நீர்த் தூவி (Douche) அல்லது கை கழுவும் தொட்டி (Lavabo)
கழிப்பறை (WC)
வெப்பமூட்டி அல்லது குளிரூட்டி (Chauffage ou Climatiseur)

🧮 அரசாங்கத்தின் வினோதக் கணக்கு

இங்குதான் விடயமே உள்ளது. மேற்கண்ட வசதிகள் ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட “சதுர மீட்டர்” அளவை நிர்ணயித்துள்ளது. அதாவது, உங்கள் வீட்டில் ஒரு கை கழுவும் தொட்டி (Lavabo) இருந்தால், உங்கள் வீட்டின் பரப்பளவு 3 சதுர மீட்டர் அதிகமாக இருப்பதாகக் கணக்கிடப்படும்!
குளியல் தொட்டி (Baignoire): கூடுதலாக 5 சதுர மீட்டர்கள்
கை கழுவும் தொட்டி (Lavabo): கூடுதலாக 3 சதுர மீட்டர்கள்
மின்சாரம் (Électricité): கூடுதலாக 2 சதுர மீட்டர்கள்
குழாய் நீர் (Eau courante): கூடுதலாக 4 சதுர மீட்டர்கள்
மைய வெப்பமூட்டி (Chauffage central): கூடுதலாக 2 சதுர மீட்டர்கள்
பலர் வீடுகளைப் புதுப்பிக்கும்போது (Rénovés) இத்தகைய வசதிகளைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், அவற்றை முறையாகப் பதிவு செய்திருக்க மாட்டார்கள். எனவே, பொது நிதிக்கான தலைமை இயக்குநரகம் (DGFiP) பழைய தரவுகளைப் புதுப்பித்து, இந்த வரிக் கணக்கைச் சரி செய்ய முடிவு செய்துள்ளது.

💰 இதனால் யாருக்கு எவ்வளவு பாதிப்பு?
பாதிக்கப்படுபவர்கள்: சுமார் 74 இலட்சம் வீடுகள். இதில் 25% தனி வீடுகளும், 15% அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடங்கும்.
கூடுதல் வரி: சராசரியாக ஒரு வீட்டுக்கு 63 யூரோக்கள் வரை வரி உயரும்.
அரசுக்கு வருவாய்: இதன் மூலம் நிதி நெருக்கடியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு (Collectivités locales) ஆண்டுக்கு 466 மில்லியன் யூரோ கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🛑 மேல்முறையீடு செய்ய முடியுமா?
நிச்சயமாக! உங்கள் வீட்டில் இல்லாத வசதிகளுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால், அதை எதிர்த்து நீங்கள் முறையிடலாம்.
2026-ன் தொடக்கத்தில்: பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்குப் பொதுவான கடிதம் அனுப்பப்படும்.
ஜூன் 2026: வரித்துறையின் இணையதளமான ‘impots.gouv’-ல் இது குறித்த முழு விவரங்களும் வெளியாகும்.
காலக்கெடு: ஜூன் மாத இறுதிக்குள் நீங்கள் உங்கள் ஆட்சேபனையை (Recours) தெரிவிக்கலாம்.

Recommended For You

About the Author: admin