கல்முனை பிரதேச செயலகம், கல்முனை உப – பிரதேச செயலகங்களைச் சொல்லி அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..!
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை.
கல்முனைப் பிரதேச செயலகம், உப – பிரதேச செயலகம் என்பவற்றை முன்வைத்து அரசியல் செய்யும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்முனை பிரதேச செயலகமும், கல்முனை வடக்கு உப – பிரதேச செயலகமும் இயங்கி வருகின்றன. கல்முனை பிரதேசத்தில் 70% வாழும் முஸ்லிம் மக்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகளும், 30% வாழும் தமிழ் மக்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன. இப்பிரச்சினைகளை தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பேசி தீர்வு காண்பதற்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் இனவாத கருத்துக்களை தெரிவிப்பது குறித்து கவலையடைகிறேன் என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத்தில் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை,
கோடீஸ்வரன் எம்.பி கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரிவில் காணிகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் இக்காணிகளை கொள்ளையடித்துள்ளவர்களை இலஞ்ச ஆணைக்குழுவிடம் தெரிவித்து இக்காணிக் கொள்ளையர்களைப் பிடிக்க வேண்டும் எனவும், கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக நீண்ட காலமாக இயங்கி வருவதாகவும், எனவே கல்முனை தமிழ் பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டத்தை தனியாக நடாத்துவதற்கு பொது நிருவாக அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கல்முனை பிரதேச செயலகமும், கல்முனை வடக்கு உப – பிரதேச செயலகமும் இயங்கி வருகின்றன. பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் நானும், கே. கோடீஸ்வரன், அஷ்ரப் தாஹிர் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட தினத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலுள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காணுவோம் என்று கொள்கையில் ஏற்றுக் கொண்டோம்.
இது தொடர்பாக தமிழ் தலைவர்களிடமும் இரு சமூகங்களுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வு காண்போம் என தீர்மானம் எடுத்தோம் நிலைமை இப்படி இருக்கின்ற போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அரசியல் நோக்கத்திற்காக இனங்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்தும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் 10 வருட காலமாக தீர்க்கப்படாத காணி பிரச்சினைகளுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும், நானும் இரண்டு சமூகங்களுக்கு இடையில் இருந்த காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம். அதேபோல் சமூகங்களுக்கு மத்தியிலுள்ள பிரச்சினைகளை சிநேகபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக பதிலளித்த பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன கல்முனை உப-பிரதேச செயலகம் தொடர்பாக மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும், தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சமாதானமான முடிவுக்கு வந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவித்தார்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. ஆலோக்கபண்டார கருத்து தெரிவிக்கையில் கல்முனை உப-பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.நீதிமன்றத்தில் வழக்குகளும் உள்ளன. எனவே தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது எனத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவனை கிராம சேவகர் பிரிவுக்கான வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை 20-02-2001ம் ஆண்டில் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவனை முஸ்லிம் கிராம சேவகர் பிரிவு 1172/8 இலக்கமுடைய அரச வர்த்தமானி பொது நிருவாக அமைச்சினால் அதிவிஷேட வர்த்தமானி மூலம் KP-71/A எனும் கிராம சேவகர் பிரிவினை பிரகடனப்படுத்தப்பட்டன. 24 வருடங்கள் கடந்தும் மேற்குறித்த வர்த்தமானி அமுல்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கான காரணங்களை பொது நிருவாக அமைச்சர் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் அபயரத்ன இது குறித்து ஆராய்ந்து பதிலளிக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை நமது நாட்டில் ஆகக்கூடிய தொகையான புதிய கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்க வேண்டிய பிரதேசமான அம்பாறை மாவட்டம், கதிர்காமப் பிரதேசமும் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 503 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. தெஹியத்தகண்டி பிரதேசத்தில் 45 கிராமங்கள் அமைந்துள்ளன. தெஹியத்தகண்டியில் 13 கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரம் உள்ளன. எல்லைக் கிராமத்தில் வாழும் தெஹியத்தகண்டி மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே தெஹியத்தகண்டி பிரதேசத்தில் 25 கிராம சேவகர் பிரிவுகளை புதிதாக உருவாக்குவதற்கான சிபாரிசினை வழங்கியும் இதுவரையும் இச்செயற்பாடுகள் பொது நிருவாக, மாகாண சபைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படாமல் உள்ளது.
இதேபோன்று அட்டாளைச்சேனை, கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் புதிய கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்க வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிராமசேவர் பிரிவில் 1000 குடும்பங்கள் தொடக்கம் 1200 குடும்பங்கள் வரை உள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்ததுடன், தெஹியத்தகண்டி பிரதேசத்தில் 20 ஆயிரம் குடும்பங்களில் 71,096 மக்களும் வாழ்ந்து வருகின்றனர். தெஹியத்தகண்டி பிரதேச மக்கள் உண்மையில் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் அபயரத்ன பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் முன்வைக்கப்பட்ட புதிய கிராம சேவகர் பிரிவுகளை உருவாக்கும் முன்மொழிவு முக்கியமானது எனவும் இது தொடர்பாக அமைச்சு விஷேட கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

