இஸ்ரேலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான இரசாயனம் கலந்த நீர் தாக்குதல்களில் மூன்று இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகச் சமூக ஊடகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது சிறிய குழுக்கள் இரசாயன நீர்த் தாரை பிரயோகிக்கும் காட்சிகள் பரவி வந்தன. இந்தச் சம்பவங்கள் குறித்துத் தூதரகம் உத்தியோகபூர்வமாக விசாரித்தது.
இந்தத் தாக்குதல்கள் தனியாகப் பயணிக்கும் நபர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மூன்று இலங்கையர்கள் தாங்கள் அனுபவித்த சம்பவங்கள் குறித்துத் தூதரகத்திடம் பின்னர் அறிக்கை அளித்துள்ளனர்.
5 இளைஞர்கள் கைது
இத்தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய பொலிஸார் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண, சி.சி.ரி.வி கமராவின் காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தூதரகம் அவசர நடவடிக்கை கோரிக்கை
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகம் மற்றும் சனத்தொகை மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கு (PIBA) இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாகப் பணம் அனுப்பும் நிலையங்கள் அல்லது ஏனைய வெளி இடங்களுக்குப் பயணிக்கும்போது, பின்வரும் பாதுகாப்புக் குறிப்புகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது:
குழுக்களாகப் பயணித்தல்: தனியாகப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுக்களாகப் பயணிக்க வேண்டும்.
பொருட்கள் பாதுகாப்பு: பயணத்தின் போது பெறுமதியான பொருட்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
அவசரநிலைகளின் போது, தொழிலாளர்கள் உடனடியாக உதவி பெறுவதற்கு உள்ளூர் அவசர தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தலாம்:
பொலிஸ் நிலையம்: 100
ஆம்புலன்ஸ் சேவைகள்: 101
மேலும், அவசர உதவிகள் தேவைப்பட்டால், இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேர ஹாட்லைன் இலக்கமான +94718447305 உடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

