சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர்கள் மேற்படி விடயத்தை தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட அழகுபடுத்தல் நிலையங்கள் அனைத்தும் உரிய தரச் சான்றிதழ்களுடன் இயங்குகின்றனவா என்பதனை கண்காணிக்க வேண்டும் எனக் கடந்த சபையில் வலியுறுத்தியிருந்தோம்.
அவ்வாறு கண்காணித்த போது பல அழகுபடுத்தல் நிலையங்கள் வியாபார உரிமம் இல்லாத நிலையில் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபார உரிமம் இன்றி எவரும் தொழில் செய்ய முடியாது. இதனால் நகரசபைக்கான வருமானம் இழக்கப்படுகின்றது.
நகரிலும் அதே நேரம் வட்டாரங்களிலும் பல தொழில் நிலையங்கள் வியாபார உரிமம் இன்றி இயங்கி வருகின்றன.
விடுதிகள் கூட வியாபார உரிமம் இன்றியும் அனுமதிகள் இன்றியும் இயங்கி வருகின்றன.அவ்வாறு உரிமம் இன்றிய விடுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் இடம்பெற்றால் யார் பொறுப்புக் கூறுவது?
அனுமதி இல்லாத விடுதிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து உள்ளது.
அதேநேரம் பலர் வீடுகளில் எந்தவித அனுமதியும் இன்றி பாரிய அளவில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவற்றை எல்லாம் கண்காணித்து 2026ஆம் ஆண்டு மிக இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என மேலும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

