மூதூர் கிளிவெட்டியில் யானை அட்டகாசம்; வாழ்வாதாரத்தை இழந்த குடும்பம்..!
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் வியாழக்கிழமை (16.10.2025) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை சிறிய கடையுடன்கூடிய கொட்டில் ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அருகில் இருந்த தென்னை, வாழை மற்றும் வீட்டுப் பயிர்களுக்கும் சேதம் விளைவித்துள்ளது.
கிளிவெட்டி குளத்தினுள் தங்கியிருக்கின்ற குறித்த யானை திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியை கடக்கும்போது வீதியின் அருகில் இருந்த சிறிய கடையினை சேதப்படுத்தியுள்ளதனால் அதனை வாழ்வாதார தொழிலாக நம்பி வாழ்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த யானையினால் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த யானையை அங்கிருந்து விரட்டுமாறு வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
கிளிவெட்டி, மேன்காமம், பெருவெளி குளங்களில் பெருமளவான யானைகள் தங்கி நிற்பதால் அருகில் உள்ள கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. இவற்றை காட்டுக்குள் விரட்டியடிப்படற்கு நடவடிக்கை எடுப்பதோடு யானை வேலி அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


