அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதி பயன்பாடு மற்றும் வீணாகும் திட்டங்கள் குறித்து எச்சரிக்கை: அபிவிருத்திப் பலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொறிமுறையாக தமது பங்கை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக்க அவர்கள் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் (DCC) தலைமை வகித்தபோதே ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பயன்படுத்தப்படாத நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவது அபிவிருத்தியைத் தடுத்து நிறுத்துவதோடு வளங்களை வீணடிக்கவும் வழிவகுக்கும் என்று எச்சரித்தார். நிறைவடையாத திட்டங்களுக்காக மீண்டும் மீண்டும் ஒதுக்கப்படும் நிதிகள், புதிய முயற்சிகளை ஆரம்பிப்பதைத் தடுக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னைய நடைமுறைகளை விமர்சித்த ஜனாதிபதி, பல அரசாங்கத் திட்டங்கள் சாத்தியக்கூறு ஆய்வுகள் அல்லது நீண்டகால பராமரிப்புத் திட்டங்கள் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக பிரதேச செயலகங்களுடன் ஒரு கண்காணிப்பு முறைமை நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தினமும் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளால் போதைப்பொருள் நிலைமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

