பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பத்மேயின் தடுப்புக் காவலை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!
பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் கேஹெல்பத்தார பத்மேயின் தாயார், அவரது மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மகனின் தடுப்புக் காவல் சட்டவிரோதமானது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus) மூலமாகவும், நீதிமன்றத்தின் எழுத்தாணை அதிகார வரம்பு மூலமாகவும் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை, தன் மகனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்து வேறு எந்த இடத்திற்கும் மாற்றாதிருக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டம் மற்றும் ஒழுங்கிற்காக மன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி, வழக்கின் உண்மைகள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை சந்தேக நபர் எங்கும் மாற்றப்பட மாட்டார் என்று நீதிமன்றில் உறுதியளித்தார்.
தற்போது நடைபெற்று வரும் அனைத்து விசாரணைகளும் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருக்கும்போதே நடத்தப்பட்டு வருவதாகவும் அரச சட்டத்தரணி மன்றில் சமர்ப்பித்தார்.
சிரேஷ்ட சட்டத்தரணி சாமீர ஹப்புதந்திரியின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அநுஜ பிரேமரத்ன மற்றும் சட்டத்தரணிகளான செனல் மாத்துகம, நாலக்க சமரக்கோன் மற்றும் ராஜிந்திர கந்தேகெதர ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை அக்டோபர் 23ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

