வசீம் தாஜுதீன் மரணம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு நாமல் ராஜபக்ச கோரிக்கை
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்கள், முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்கள் பற்றிய தகவல்களையும் கண்டறியுமாறு நாமல் ராஜபக்ச அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக தாஜுதீனின் மனைவி அடையாளம் காட்டிய நபர் குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, அவர் எங்கு வசித்து வந்தார், யாருடன் தங்கியிருந்தார், யாருடன் பழகினார் போன்ற விவரங்களை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
”அரசியல் மேடைகளில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்காமல், தாஜுதீனுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் ஒரு விரிவான விசாரணையை நடத்த வேண்டும். இல்லையெனில், இது அவரது ஆத்மாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
முந்தைய ‘ஐஸ் வாரம்’ மற்றும் ‘ரணில் வாரம்’ போன்று, தற்போது சிலர் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக அரசாங்கம் ‘தாஜுதீன் வாரத்தை’ ஆரம்பித்துள்ளது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.
இவ்வருட ஆரம்பத்தில் மித்தெனியவில் வைத்து கொல்லப்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயற்பாட்டாளர், 2012 இல் தாஜுதீனின் மரணத்திற்கு முன்னர் அவரைப் பின்தொடர்ந்து சென்ற வாகனத்தில் இருந்ததாக காவல்துறை வெளியிட்ட தகவல் வெளியானதையடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

