கொழும்பில் துப்பாக்கிச் சூடு: 22 வயது சாரதி மற்றும் 17 வயது இளைஞன் கைது
கொழும்பில் இடம்பெற்ற தனித்தனி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பொரலஸ்கமுவ, புலத்சிங்கள மாவத்தையில் ஆகஸ்ட் 24 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் களுபொவில, அத்திடியவில் வைத்து மேற்கு மாகாண தென் பிராந்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை சந்தேகநபர் ஓட்டிச் சென்றது விசாரணைகளில் இருந்து தெரியவந்ததை அடுத்து, செப்டெம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மற்றொரு நடவடிக்கையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) புலனாய்வுப் பிரிவினர் ராகம, லிண்டன் மைதானம் அருகே 17 வயதுடைய சிறுவன் ஒருவனைக் கைது செய்துள்ளனர். இவர் ஆகஸ்ட் 22 ஆம் திகதி, பொரளையில் சீவலிபுரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என நம்பப்படுகிறார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் ராகம காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

