கிராமிய மக்கள் வரை நிர்வாக மட்டத்தினை பரவலாக்குதலே எமது அரசாங்கத்தின் நோக்கம்..!
ஜனாதிபதி அனுர
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இன்றைய தினம் (01.09.2025) திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு பொதுமக்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினை வரவேற்றதுடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும் வரவேற்றாா். மேலும் மதகுருமாா்கள்,
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ சுனில் குமாரகமகே,
வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கட்டடத்தொகுதி 60ஆம் ஆண்டு நிறைவைவிழாவிற்கு நினைவு முத்திரை வெளியீட்டினையொட்டி வருகை தந்த பிரதித்தபால்மா அதிபர் மற்றும் உத்தியோகத்தர்கள் முப்படையினர் , வடமாகாண சபை உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகிய அனைவரையும் வரவேற்றார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களன் காத்திரமான பங்களிப்பிற்கு நன்றிகளையும் தெரிவித்தாா். மேலும், கடவுச்சீட்டு அலுவலகமானது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும் எனவும், வடமாகாண மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்தமைக்கு அனைவருக்கும் நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், கொழும்பிற்கு வருகை தந்து தமது தேவைகளை நிறைவு செய்வதனைக் கருத்தில் கொண்டு கிராமங்கள் வரை நிர்வாக மட்டங்களை கொண்டுவருவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அந்தவகையில் தற்போது யாழ்ப்பாணத்தில் கடவுசீட்டு அலுவலத்தை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி நிதியத்தின் பயனைக் கூட பிரதேச செயலகத்தில் விண்ணப்பத்து பயன்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் தண்டப்பணம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றை தொலைபேசி வாயிலாக செலுத்தும் வகையில் டியிற்றல் மயப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மாவட்டச் செயலகத்தில் இவ்வாண்டு தை மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என தம்மால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைய, இவ் வாண்டு சித்திரை மாதம் முதற்கட்டமாகசம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், அடுத்து ஆண்டு தை மாதம் அடுத்த கட்டம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், அரச துறையானது செயற்றிறன் அற்றுக் காணப்படுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவிவருவதனை தவிர்க்கும் முகமாக அனைத்து அரசாங்க உத்தியோக்களும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என்றும், இனம், மதம், மொழி, சாதி கடந்த நிலையில் நாட்டினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்படும் எனவும், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும், வடக்கு மாகாணத்தில் புதிய கைத்தொழில் வலயங்கள் 3 உருவாக்கப்படும் எனவும் தெரிவித்து முதலீட்டாளர்களுக்கு அழைப்பும் ஜனாதிபதி அவர்களால் விடுக்கப்பட்டது. மேலும், யாழ்ப்பாணத்திற்கான மிகப் பெரிய சுற்றுலாத் திட்டம் தயாரிப்பதற்கு சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள், இளைப்பாறிய அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எமது அரசாங்கத்தில் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிவரசு குடியகல்வு திணைக்களத்தினை நிறுவுவதாக உறுதியளித்து அதனை இன்று நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் கடவுச்சீட்டை யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் என்றும், இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டதுடன், வடக்கு மாகாணத்தில் பெரும் பிரச்சினையாகவுள்ள போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதிப் போலிஸ்மா அதிபருடம் கலந்துரையாடி விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல் காணி பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டதுடன் இன, மத மற்றும் மொழி வேறுபாடு இன்றி அனைவரும் சமமானவர்கள் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியிலேயே
நேக்கப்பட்டு நாடு முழுவதும் சமனான சட்டங்கள் முன்னெடுப்படும் என்றும் மன்னார், முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமை ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் வடக்கு மக்களின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், யாழ்ப்பாணத்திற்கு மிக முக்கியமான நாள் எனவும், சரியாக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் இவ்விடத்தில் நடைபெற்றமாவட்ட செயலக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டபோது முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மிகவும் குறுகிய காலப்பகுதியில் யாழ்ப்பாண பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும், இவ் அலுவலகம் மிக விரைவாக திறந்து வைக்க ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கிய வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.மேலும் ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றுவதுடன் பல முக்கியமான பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க உள்ளார் எனவும், அதன்படி இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது எனவும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்வினைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான யாழ்ப்பாண பொது நூலகத்தின் நடவடிக்கைகளை டிஜிற்றல் மையப்படுத்திய செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது எனவும், இதற்காக வரவுசெலவுத்திட்டத்தில் நூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார். மேலும் இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த விளையாட்டு மைதானம் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மண்டைதீவுப்பகுதியில் சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு மைதானத்திற்கான அங்குரார்பணம் செய்துவைப்பார் எனவும்,
அத்துடன் நாளை முல்லைத்தீவு பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பதுடன் பதினாறாராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை முக்கோண வலயத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்க உள்ளார் எனவும்,
ஜனாதிபதி அடிக்கடி நினைவுபடுத்துவது தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த பிரதேசமான யாழ்ப்பாணம் மரபுரிமைகள் அடங்கிய நவீனத்துவமான இடமாக உருவாக்க வேண்டுமென தெரிவித்ததுடன், இக்குறிக்கோளை நோக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக அனைவரிடமும் அன்பார்ந்த ஆதரவை வழங்க வேண்டுமென கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு சுமிந்த பத்திராஜ, வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள்.


