முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதிமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காணும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை மா அதிபர் (IGP) இன்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கருதப்படுவதாக காவல்துறை மா அதிபர் கூறியுள்ளார். இந்த போராட்டம், நீதிமன்றத்திற்கு பிணை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் ஒரு முயற்சி என்று நீதிவானும் கண்டறிந்துள்ளார்.
காவல்துறையின் அறிவித்தலின்படி போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அடையாளம் காண, காவல்துறை தற்போது புகைப்பட ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறது.
விசாரணை முடிந்ததும், ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை மா அதிபர் உறுதிப்படுத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த போராட்டத்தில், ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கருப்பு உடைகளை அணிந்து, கருப்புக் கொடிகளை அசைத்து, அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கோஷமிட்டனர்.
இதேவேளை, போராட்டத்தில் கடமையில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக, ஒரு முன்னாள் நகர சபை உறுப்பினர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஒரு போராட்டக்காரர் வீசிய போத்தலால் அந்த அதிகாரி காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

