திட்டமிட்ட சமூக பிறழ்வுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்ககூடாது..!

எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர்

தனது உரையில்,

எங்களது தனித்துவமான பண்பாடுகளைப் பேணிப்பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்காக இவ்வாறான விழாக்கள் அவசியமானவை. விருந்தோம்பல், இரங்குதல், முதியோரை மதித்தல் என்பன எங்கள் தமிழர்களின் தனித்துவமான பண்பாடுகள். கால ஓட்டத்தில் அதாவது பழையன கழிதலும் புதியன புகுதலும் அவசியம்தான்.

அதற்காக நாம் எமது சமூகத்துக்கு ஒவ்வாத விடயங்களை உள்வாங்கக் கூடாது. நல்லவற்றை எடுத்துக் கொள்வோம்.
எமது இளம் சமூகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவலையடைகின்றனர்.

அவர்களை கல்விக்கு மேலதிகமாக இரண்டு வழிகள் ஊடாக மாற்றலாம் என்பது எனது ஆழமான நம்பிக்கை. கலை, விளையாட்டு ஆகியன ஊடாகவே அவர்களை மடைமாற்றம் செய்யலாம்.

அவர்களுக்கு இந்த இரண்டு செயற்பாட்டிலும் வாய்ப்புக்களை நாங்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சமூகப் பிறழ்வுகளை முறியடித்து நாம் முன்னேற வேண்டும்.

ஒருவரை வாழும் போதே கௌரவிப்பதுதான் பெருமை. நீங்கள் இங்கு மூத்த கலைஞர்களை கௌரவித்திருக்கின்றீர்கள். மிகச் சிறப்பான விடயம். அதேபோல இளம் கலைஞர்களையும் ஊக்குவித்திருக்கின்றீர்கள்.

இதைத் தொடர்ந்து செய்யுங்கள். கலைகளை வளர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் ஆரோக்கியமான நகர்வுகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும், என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: admin