சுப்ரீம்சாட் (SupremeSAT) விவகாரம்: பொய்த் தகவல் அளித்த BOI அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்சவின் மகன் ரோஹித ராஜபக்சவினால் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் திட்டம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தவறான புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து உயர்மட்ட அரசு அதிகாரிகள் விவாதித்து வருவதாக தி சண்டே மார்னிங் பத்திரிகைக்கு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரச ஊழியர் சேவை விதிமுறையின் படி, பிரதமரை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் அதிகாரி, முழுமையான விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் வைக்கப்படுவது உட்பட ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் (Supreme Global Holdings) நிறுவனம் அதன் துணை நிறுவனமான சுப்ரீம்சாட் லிமிடெட் (SupremeSAT Ltd.) மூலம் இந்த திட்டத்தைத் தொடங்கியது என்றும், இது முதலீட்டுச் சபையுடன் (BOI) 2012 மே 23 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும் கூறினார்.
இந்த திட்டத்தின் மொத்த முதலீடு ரூ. 1.828 பில்லியன் என்றும், இதற்கு அரசாங்கத்தால் நிதிப் பங்களிப்பு எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சுப்ரீம்சாட் நிறுவனத்தின் வருவாய் குறித்த புள்ளிவிவரங்களையும் அவர் வழங்கினார்.
ஆனால், அமைச்சர் வசந்த சமரசிங்க, செயற்கைக்கோள் வெளியீடு மற்றும் அதன் வருவாய் குறித்து BOI தவறான புள்ளிவிவரங்களை பிரதமருக்கு வழங்கியதாகக் கூறி, இந்த தகவலை சவால் விடுத்துள்ளார்.
சுப்ரீம்சாட் நிறுவனம் செயற்கைக்கோளில் இருந்து அல்லாமல், ஒரு நிறுவனமாக வெறும் ரூ. 342 மில்லியன் வருமானம் மட்டுமே ஈட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் சமரசிங்க இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

