முழு காசாவையும் இராணுவம் கையகப்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காசா நகரை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரின் ஒரு முக்கிய மற்றும் ஆபத்தான கட்டத்தைக் குறிக்கிறது.

முன்னதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “முழு காசாவையும் கட்டுப்பாட்டில் எடுக்க” இஸ்ரேல் உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

வெளியான தகவல்களின்படி, இந்தத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். காசா நகரை இராணுவம் முதலில் ஆக்கிரமிக்கும்.

மேலும், இராணுவம் இந்த நடவடிக்கைக்குத் தயாராகும் அதே வேளையில், போர் நடக்கும் பகுதிகளுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து சென்றடைவதை உறுதி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு (IDF) உத்தரவிடப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து முக்கிய கொள்கைகளையும் முழு அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அவற்றில் ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், காசாவை இராணுவமற்ற பகுதியாக மாற்றுதல், இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் இப்பகுதியை கொண்டு வருதல் மற்றும் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபையுடன் தொடர்பில்லாத ஒரு புதிய சிவில் நிர்வாகத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

காசாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்கும் இந்தத் திட்டம், இஸ்ரேலிய தலைமையின் உள்ளேயே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக இந்தத் திட்டம் அமைந்திருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அத்தகைய ஒரு நடவடிக்கை மீதமுள்ள பணயக்கைதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், நீண்ட மற்றும் அதிக செலவு பிடிக்கும் இராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் இராணுவம் எச்சரித்திருந்தது. பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது தங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் என்று கூறி வருகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தத் திட்டத்திற்கு விமர்சனமும் கவலையும் எழுந்துள்ளன. ஏற்கனவே பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள காசா மக்களுக்கு இது “பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என ஐ.நா மற்றும் மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த முடிவை ரஷ்யா ஒரு “மிக மோசமான நடவடிக்கை” என்று கண்டித்துள்ளதுடன், பாலஸ்தீனர்களின் ஒப்புதலுடன் மட்டுமே அரபு நாடுகள் எந்தவொரு திட்டத்தையும் ஆதரிக்கும் என்று ஜோர்டான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin