உயிர்கொல்லி போதைப்பொருட்களான ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சைக்கு முன்வருவது கடந்த அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கான புனர்வாழ்வு விடுதி வசதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், அவர்களுக்கு உளவள ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்ன் பாவனையும், ஏனைய போதைப்பொருள்களின் பாவனையும் வெகுவாக அதிகரித்துள்ளன. ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சமூகப் பிறழ்வான சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இந்தநிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வருவது அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்கான வசதி இல்லை
சாவகச்சேரி மருத்துவமனையில் மதுபாவனைக்கு அடிமையானவர்களைத் தங்க வைத்து சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகள் உள்ளபோதும், ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களைத் தங்க வைத்து சிகிச்சையளிக்கக் கூடிய விடுதி வசதிகள் இல்லை.
கந்தகாடு, வெலிகந்தை போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு முகாம்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படுகின்றன. அவ்வாறான புனர்வாழ்வு முகாம்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இல்லை.
புனர்வாழ்வு நிலையம்
இதனால், தற்போது சிகிச்சைக்கு வரும் ஹெரோய்ன் போதைப்பொருள் அடிமையாளர்களுக்கு உளநல ஆலோசனைகளும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு , வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தனியாக, குழுவாக, குடும்ப உறுப்பினர்கள் என பல்வேறு வழிமுறைகளில் பல்வேறு கட்டங்களாக உளநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சை பெற முன்வரும் நிலையில், அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கக்கூடிய நிலையம் ஒன்றை உருவாக்குவது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.