சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் பாராளுமன்ற ஆய்வு மையமாக மாற்றப்படும்
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான வள மற்றும் பயிற்சி மையமாகச் செயற்படும் வகையில், “பாராளுமன்ற ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிலையமாக” மாற்றுவதற்கான யோசனைக்கு பாராளுமன்ற ஊழியர் ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் ஜூலை 24, 2025 அன்று நடைபெற்ற குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆரம்ப கட்டமாக, ஆறு மாத காலப்பகுதியில் இந்த நிலையத்தின் திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு அபிவிருத்திக்கு தலைமை தாங்கி, ஒருங்கிணைத்து ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச உத்தியோகத்தர் ஒருவரை திட்ட முகாமையாளராக நியமிப்பதற்கு குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்டவாக்க அறிவை மேம்படுத்தவும், அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இந்த மையம் மேம்பட்ட ஆய்வு வசதிகள், சிறப்புப் பயிற்சி மற்றும் கொள்கை பகுப்பாய்வு சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

